தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் கனடாவில் சுட்டுக்கொலை

2 mins read
b6536d97-29d8-46bb-926c-8a1140f3ced0
ஹர்தீப் சிங் நிஜ்ஜார். - படம்: இந்திய ஊடகம்

இந்தியாவில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவரான காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் சுர்ரே நகரில் திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலிஸ்தான் புலிப்படை கனடாவைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. ஹர்தீப் சிங் நிஜாரின் தலைக்கு ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்து இருந்தது.

பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பார்சிங்பூர் என்ற நகரைச் சேர்ந்த நிஜார், சுர்ரே நகரில் குரு நானக் சீக் குருத்வாரா ஷாஹிப் கோயிலின் கார் பேட்டையில் ஒரு காரின் உள்ளே குண்டடிப்பட்டு இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிஜார், இரண்டு பேரால் சுடப்பட்டார் என்றும் அவர் அதே இடத்தில் இறந்து விட்டார் என்றும் முதல்கட்ட புலன்விசாரணை மூலம் தெரியவந்து இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கனேடிய காவல்துறை அதிகாரிகள் நிஜாரின் உடலை அந்த இடத்தில் இருந்து கொண்டுசென்றபோது சீக்கியர்கள் சிலர் ஒன்றுகூடி காலிஸ்தான் ஆதரவு முழக்கமிட்டனர்.

இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் குரல் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாத காரியங்களில் நிஜாருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் இந்திய அரசாங்கம் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தது.

நிஜாரைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களைத் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தேசிய புலன்விசாரணை முகவை சென்ற ஆண்டு ஜூலை மாதம் அறிவித்து இருந்தது.

அதற்கு மூன்று வாரங்கள் முன்னதாக நிஜாருக்கு எதிராக அந்த அமைப்பு குற்றச்சாட்டு ஒன்றைத் தாக்கல் செய்தது.

ஜலந்தரில் 2021ஆம் ஆண்டு இந்து பூசாரி ஒருவர் தாக்கப்பட்டார். அதன் தொடர்பில் நிஜார் மீதும் இதர மூன்று பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.

இந்தியாவில் பிரிவினைவாத செயல்களை நிஜார் தூண்டிவிட்டு வந்தார் என்றும் தேசிய புலனாய்வு முகவை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்