‘அமைதியின் பக்கம் இந்தியா இருக்கிறது’

‘அமைதியின் பக்கம் இந்தியா இருக்கிறது’

2 mins read
8f411510-48b0-449f-9e78-2c799ce56f9d
இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை வலுப்படுத்த அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: உக்ரேன்-ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தூதரக அளவில் மற்றும் அமைதி பேச்சுவார்த்தை வழியே இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு நான்கு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பு அவர் அந்நாட்டின் நாளிதழான வால் ஸ்திரீட் ஜர்னலுக்குப் பேட்டி அளித்தார். அதில் அனைத்துலகச் சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். உக்ரேன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை மிகவும் முக்கியம் என்றும் போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

“உக்ரேன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலைமையுடன் செயல்படுகிறது என்று சிலர் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர். அது உண்மையல்ல. இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது. அமைதிக்கு இந்தியா உச்சபட்ச முன்னுரிமை தருகிறது. இது உலக நாடுகளுக்கு நன்கு தெரியும்,” என்று பிரதமர் மோடி கூறினார்.

இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை வலுப்படுத்த அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவே அமெரிக்காவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடனின் சிறப்பு அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் செல்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

“நியூயார்க்கிலும் தலைநகர் வாஷிங்டனிலும் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தினக் கொண்டாட்டங்களும் இதில் அடங்கும்,”என்று பிரதமர் மோடி கூறினார்.

நாளை பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும்.அதனை அடுத்து, அதிபர் பைடனைச் சந்தித்து உயர்நிலை கலந்துரையாடலை பிரதமர் மோடி தொடர்வார் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் பிரதிநிதித்துவச் சபை, செனட் சபையின் கூட்டமர்வில் திரு மோடி பேச இருக்கிறார். இந்தக் கூட்டமர்வில் உரையாடும் முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமை பிரதமர் மோடியைச் சேரும்.

அமெரிக்கப் பயணத்துக்குப் பிறது அவர் அங்கிருந்து எகிப்துக்குச் செல்கிறார்.

குறிப்புச் சொற்கள்