புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர் ஒருவர் தமது பெயரில் 83 மருத்துவமனைகளைப் பதிவுசெய்துள்ளார்.
மருத்துவமனைகள், மருந்தகங்களின் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை உறுதிசெய்தபோது இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதன்தொடர்பில் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆக்ராவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 449 மருத்துவ வசதிகள் இயங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் 15 மருத்துவர்கள் சட்டவிரோதமாக சேவை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
அந்த மருத்துவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தலைமை மருத்துவ அதிகாரி அருண் குமார் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். அதன் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
மருத்துவர்கள் அல்லாதோர் மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவற்றை நடத்துவதற்காக சுகாதாரத் துறையிலிருந்து மருத்துவர் என்ற பெயரில் உரிமத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று இவ்வாண்டு உத்தரப் பிரதேச அரசாங்கம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து, இந்தச் சம்வபம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது கடுமையான விவகாரம் என்றும் இத்தகைய செயல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஒபி யாதவ் கூறினார். தகுந்த நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறைக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் அவர் சொன்னார்.