யோகா மூலம் முரண்பாடுகளை முறியடிக்க வேண்டும்: மோடி

யோகா மூலம் முரண்பாடுகளை முறியடிக்க வேண்டும்: மோடி

1 mins read
85d21f14-94ea-4da3-b517-24e80b5c17df
“யோகா மூலம் முரண்களை முறியடிப்போம்; எதிர்ப்புகளைச் சமாளிப்போம்; தடுப்புகளைத் தகர்ப்போம்” என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.   - படம்: இபிஏ

நியூயார்க்: யோகா உடல், மனப் பயிற்சி வழியாக முரண்பாடுகளை முறியடிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். அனைத்துலக யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

அதையொட்டி பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் காணொளிச் செய்தி வெளியிட்டார்.

“யோகா மூலம் முரண்களை முறியடிப்போம்; எதிர்ப்புகளைச் சமாளிப்போம்; தடுப்புகளைத் தகர்ப்போம்” என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள திரு மோடி, ஐநா தலைமையகத்தில் நடக்கும் யோகா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார்.

புதிய சிந்தனைகளை வரவேற்று, பன்முகத்தன்மையைக் கொண்டாடும் பண்புகளை வலுப்படுத்தும் யோகா, மனதையும் உடலையும் ஒருமைப்படுத்தும் என்றும் சிந்தனையையும் செயலையும் ஒருங்கிணைக்கும் என்றும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இணக்கத்தை உண்டாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘ஒரே குடும்பம்’ என்ற கருப்பொருளுடன் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அனைத்துலக யோகா தினத்தின் மூலம் இணைகிறார்கள் என்று குறிப்பிட்ட திரு மோடி, உலகளாவிய இயக்கமாக மாறி யோகா உலகை இணைக்கிறது என்றும் தெரிவித்தார்.

யோகா உடற்பயிற்சியின் மிக முக்கியத்தை அங்கீகரிக்கும் வகையில் ஜூன் 21ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று ஐநா அமைப்பு 2014 டிசம்பரில் அனைத்துலக யோக தின அறிவிப்பை விடுத்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்