நியூயார்க்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன் நாட்டின் கார் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் இடம்பெற வகை செய்கிறார்.
அத்தகைய ஒரு முதலீட்டை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்காவின் டெஸ்லா மின்சாரக் கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ வருகை அளித்துள்ள இந்தியப் பிரதமரை செவ்வாய்க்கிழமை திரு மஸ்க் நியூயார்க்கில் சந்தித்தார். தனது நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கார் தயாரிப்பு ஆலையை அமைக்கும் தனது திட்டம் பற்றி அந்தச் சந்திப்பின்போது, திரு மஸ்க் இந்தியப் பிரதமரிடம் விளக்குவார் என்று முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் வட்டாரம் ஒன்று கூறி இருந்தது.
சூரிய மின்சக்தி, மின்கலன்கள், மின்வாகனங்கள் ஆகியவற்றுக்கு இந்தியாவில் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு மஸ்க், இந்தியாவில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் துணைக்கோள இணையச் சேவையை அறிமுகப்படுத்தலாம் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு மஸ்க், இந்தியாவைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ள திரு மோடி, தன் நாட்டில் அந்நிய முதலீடுகள் இடம்பெற ஆவன செய்வதாகவும் முதலீடு செய்ய தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் விரைவில் டெஸ்லா கால் பதிக்கும் என்பது நிச்சயம் என்றார் அவர்.
மின்வாகனத் தொழில்துறையிலும் அதிவேக வளர்ச்சி அடையும் விண்வெளி தொழில்துறையிலும் முதலீடு செய்ய இந்தியாவில் உள்ள வாய்ப்புகளைக் கண்டு அறியும்படி திரு மஸ்கை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் பிறகு குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் மின்கலன்களையும் மின்சார வாகனங்களையும் தயாரிக்க தொழிற்சாலை ஒன்றை அமைப்பதன் தொடர்பில் டெஸ்லா நிறுவனத்தின் மேலாளர்கள் சென்ற மாதம் இந்தியா சென்று அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சு நடத்தினர்.
டெஸ்லா , இந்தியாவில் புதிய ஆலையை அமைப்பதற்கான இடத்தை இந்த ஆண்டு முடிவுவாக்கில் தேர்வு செய்துவிடும் என்று சென்ற மாதம் திரு மஸ்க் தெரிவித்து இருந்தார்.

