புதுடெல்லி: இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் அருகே உள்ள ‘ரோசியேட் ஹவுஸ்’ எனும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆடவர் ஒருவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கட்டணம் செலுத்தாமல் தங்கியுள்ளார்.
அதனால் அந்த ஹோட்டலுக்கு ஏறத்தாழ 58 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
சந்தேக நபரான அங்குஷ் தத்தா 603 நாள்கள் அந்த ஹோட்டலில் தங்கியுள்ளார். இதுவரை அவர் ஒரு ரூபாய் கூட கட்டணமாகச் செலுத்தவில்லை என்றும் புகார் மனுவில் ஹோட்டல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
அங்குஷ் 2019 மே 20ஆம் தேதி முதல் 2021 ஜனவரி 22ஆம் தேதி வரை அந்த ஹோட்டலில் தங்கியதாகக் கூறப்படுகிறது.
அங்குஷ் தத்தாவுக்கு ஹோட்டல் ஊழியர் பிரேம் பிரகாஷ் என்பவர் உதவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஹோட்டல் அறை வாடகை, ஹோட்டலில் தங்கியிருப்பவர்களின் கட்டண நிலுவைத்தொகை, ஹோட்டலின் மென்பொருள் போன்றவற்றை பிரேம் கவனித்து வருகிறார்.
அவர் அங்குசுக்கு விதிமுறைகளை மீறி உதவியதாகக் கூறப்படுகிறது. அங்குஷிடம் பிரேம் பணம் வாங்கியிருக்கலாம் என்றும் புகார் மனுவில் ஹோட்டல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

