மும்பை: மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே லஞ்சம் வாங்கிய வழக்கில் ஷாருக்கான், அவருடைய மகன் ஆர்யன் கான், அவரின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோரிடம் வாக்குமூலம் வாங்க சிபிஐ முடிவுசெய்துள்ளது.
அவர்களிடம் வரும் நாள்களில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் அவருடன் சிலரும் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர். அந்த கைது நடவடிக்கையை சமீர் வான்கடே மேற்கொண்டார்.
ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி விசாரணைக்குழு விடுவித்தது.
அவரை விடுவிக்க வான்கடே ஷாருக்கானிடம் லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. அவர் மீது ஊழல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டார் என்றும் ஆனால் அவர் ரூ.18 கோடி தர ஒப்புக்கொண்டு, அதில் ரூ.50 லட்சத்தை முன்பணமாக வான்கடே பெற்றுக்கொண்டார் என்றும் வான்கடேமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும்.