புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து 50 நாள்கள் கடந்துள்ள நிலையில் ஜூன் 24ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். பிற்பகல் 3 மணிக்கு அக்கூட்டம் நடைபெறும் என்று உள்துறை அமைச்சு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, மே 29ஆம் தேதி அங்கு சென்ற திரு அமித் ஷா, மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்காக குகி, மைத்தி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார்.
அதையடுத்து, “மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்குத் தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர். மகளிர் அமைப்புகளின் தலைவர்களிடம் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். மாநிலத்தில் அமைதியையும், செழிப்பையும் உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். இங்கு விரைவில் அமைதி திரும்பும்” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், மணிப்பூர் வன்முறைக்கான காரணங்கள், வன்முறை தொடர்பான நிகழ்வுகள், அதில் அரசு அலுவலர்கள் யாராவது தவறு செய்திருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக கௌஹாத்தி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லாம்பா தலைமையில் மூவர் குழுவை உள்துறை அமைச்சு அமைத்தது.
ஆறுமாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மணிப்பூரில் 38 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதில் 53 விழுக்காட்டினர் மைத்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மே 3ஆம் தேதி பேரணி நடந்தது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.


