ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தஸ்ரத் குமாவத். 10 ஆண்டுகளுக்கு முன்னர் சீமா என்பவரைத் திருமணம் புரிந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் தஸ்ரத் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.
விசாரணைக்குப் பிறகு, மனைவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.55,000 வழங்கும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. தஸ்ரத் அத்தொகையைத் தராததால் சீமா மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.
தஸ்ரத்தின் வழக்கறிஞர், ‘‘தஸ்ரத் தெருவில் வியாபாரம் செய்பவர். ஏற்கெனவே கடன் உள்ளிட்ட பணப் பிரச்சினைகளில் இருப்பதால் அவரால் நிவாரணத் தொகைய வழங்க இயலவில்லை’’ என்று கூறினார். நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது.
இதையடுத்து காவல்துறையினர் தஸ்ரத்தைக் கைது செய்து ஜூன் 17ஆம் தேதி நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்றனர். சிறிது நேரத்தில் தஸ்ரத்தின் உறவினர்கள் 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் அடங்கிய 7 மூட்டைகளில் ரூ.55,000 தொகையைக் கொண்டுவந்தனர்.
சீமாவின் வழக்கறிஞர், “மனைவியைக் கொடுமை செய்யும் நோக்கத்திலேயே தஸ்ரத் இவ்வாறு செய்கிறார். இவற்றை எண்ணி முடிக்கவே 10 நாள்களாகும்,’’ என்றார்.
தஸ்ரத்தின் வழக்கறிஞர், “தெருவில் வியாபாரம் செய்யும் அவருக்கு நாணயங்களாகத்தான் கிடைக்கும். அவை செல்லக்கூடிய நாணயங்கள்,” என்று வாதிட்டார்.
விசாரணையை 26ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிமன்றம், அந்த நாணயங்களை 1,000 ரூபாய்களாகப் பிரித்து 55 பொட்டலங்களாகக் கொண்டு வரும்படி உத்தரவிட்டது. தஸ்ரத் ரூ.1 லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


