இம்பால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காரிலிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு சிறார்கள் உட்பட மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம் புதன்கிழமை இரவு 7.15 மணியளவில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, “கார்கள் நிறுத்துமிடத்தில் ஒட்டுநர் ஒருவர் ஸ்கார்ப்பியோ காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த காரில் யாருமில்லை,” எனக் கூறினர்.
மணிப்பூரில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவான மறுநாள் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
கிளர்ச்சியாளர்கள் லேமாகாங் பகுதியில் அமைத்திருந்த பதுங்குகுழிகளை ராணுவத்தினர் அழித்தனர்.
இதனிடையே, மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 1,500 மாணவர்கள் மிசோரம் மாநில அரசுப் பள்ளியில் சேர்ந்தனர்.


