புதுடெல்லி: இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெப்ப அலையினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட மெய்நிகர் ஆலோசனை கூட்டத்தை புதன்கிழமை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்கள் வெப்ப அலையைச் சமாளிக்க தங்களின் பொது சுகாதாரத் துறையை எப்படி தயார் செய்துள்ளனர் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், இறந்தவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை பகிரும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதன்மூலம் அந்த மாநிலங்களின் நிலைமையைச் சிறந்த முறையில் மதிப்பீடு செய்ய முடியும் என்றும் அனைத்து மக்களுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்கு வழிவகை செய்யும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்படியும் அவர்கள் கூறினர்.
வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் குழு அனுப்பப்பட்டது. அந்தக் குழு அனுப்பப்பட்ட மறுநாள் இந்தக் கூட்டம் நடந்தது. பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.