பெங்களூர் சிறுவர்களின் புத்தாக்கத்திற்குப் பாராட்டு

பெங்களூர் சிறுவர்களின் புத்தாக்கத்திற்குப் பாராட்டு

1 mins read
b14b3b3f-0e4c-4196-823c-8bf9a2270d03
இளம் புத்தாக்கத் திறனாளர்கள் ஷயான் அகமதும் (வலது) சுவாமிநாதன் விவேகானந்தும் (இடது) தலைமையாசிரியர் மஞ்சுவுடன் ஜி20 கண்காட்சியில் கலந்துகொண்டனர். - படம்: இந்திய ஊடகம்

புனே: விவசாயிகளின் இன்னல்களுக்கும் பசியைப் போக்குவதற்கும் தீர்வுகள் தேடித்தரும் கைப்பேசிச் செயலிகளை பெங்களூரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உருவாக்கியுள்ளனர்

நான்காம் கல்வி பணிக்குழுக் கூட்டத்திற்கு இடையே நடைபெற்ற கண்காட்சியில் அவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

13 வயது ஷயான் அகமதும் 15 வயது சுவாமிநாதன் விவேகானந்தும் தங்கள் கைப்பேசிச் செயலிகளை அறிமுகப்படுத்தவும், நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர், அதிகாரிகள், ஜி20 பேராளர்கள் ஆகியோரிடம் அவற்றைப் பற்றி விளக்குவதற்கும் கண்காட்சியில் கலந்துகொண்டனர்.

உலகத்தை, குறிப்பாக இந்தியாவை வாட்டிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அவர்கள் காட்டிய பேரார்வத்திற்காக, கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அச்சிறுவர்களின் கடையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பலரும் அவர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தனர்.

குடும்பத்தோடு வெளியில் சென்றபோது, அதிக அளவில் உணவு வீணாவதையும் கடும்பசியில் தெருவில் இருந்த குழந்தைகள் தூக்கி எறியப்பட்ட அந்த உணவை உட்கொண்டதையும் கண்ட அகமதுக்குப் பசி என்ற சொல்லுக்கான அர்த்தம் மாறியது.

உணவு வீணாவது, ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்குப் போதிய வசதியில்லாதது ஆகிய சவால்களைக் கையாள அவரது புத்தாக்கத் தீர்வு நோக்கம் கொண்டுள்ளது.

இதற்கிடையே, விவசாயிகளின் நிலைமை குறித்து அதிக அக்கறை கொண்டுள்ள விவேகானந்த் விவசாயத்தின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் உதவி வழங்கக்கூடிய பலசேவை செயலியை உருவாக்கினார்.

இந்த இரண்டு இளம் புத்தாக்கத் திறனாளர்களைக் கண்டு அனைவரும் வியந்துபோனதாக அவர்களின் ஆசிரியர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்