புதுடெல்லி: உலக வர்த்தக நிறுவனத்தில் தங்களுக்கு இடையில் நிலவி வந்த ஆறு சச்சரவுகளை முடித்துக் கொள்ளப்போவதாக இந்தியாவும் அமெரிக்காவும் வியாழக்கிழமை இணங்கின.
அமெரிக்க பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு நடத்தினார்.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு இந்த இணக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பாதாம் பருப்பு போன்ற குறிப்பிட்ட அமெரிக்க தயாரிப்புப் பொருள்களுக்கான தீர்வையை அகற்ற இந்தியா இணங்கி இருக்கிறது என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையில் முக்கியமான பல உடன்பாடுகள் கையெழுத்தாயின. அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு இடம்பெற்றது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் எஃகு, அலுமினியம் போன்ற பொருள்களுக்கு அமெரிக்க நிர்வாகம் வரி விதித்தது. அதற்குப் பதிலாக இந்தியாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரி விதித்தது.
இப்போது இரு நாடுகளும் இணங்கி இருப்பதால் அமெரிக்காவின் வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கும் தயாரிப்புத் துறை பொருள்களுக்கும் அதிக சந்தை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.
அமெரிக்காவும் இந்தியாவும் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக இந்த இணக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
உலக வர்த்தக நிறுவனத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய ஆறு சச்சரவுகளில் மூன்றை அமெரிக்காவும் மூன்றை இந்தியாவும் கிளப்பி இருந்தன.