“பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழிலில் 10 வயது முதல் ஈடுபட்டு வருகிறேன்,” என்றார் திரு சஞ்சீவி என்ற 49 வயது ஆடவர்.
சிதம்பரம் நகருக்கு அருகே உள்ள சோழமாதேவி என்ற ஊரைச் சேர்ந்த திரு சஞ்சீவி இரு சகோதரிகளை மணந்துகொண்டவர். மொத்தம் ஏழு புதல்விகள். சிலருக்கு மணமாகிவிட்டது. சிலருக்கு இனிமேல்தான் திருமணம் ஆக வேண்டும்.
“காலநிலைக்குத் தோதாக தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் சென்று கோயில்கள், திருமண மண்டபங்களை அணுகி ஈயம் பூசும் தொழிலைச் செய்து வருகிறேன்.
“திருக்கடையூர், திருவிடைமருதூர், திருநாங்கூர் போன்ற பேரூர்களில் உள்ள பிரபலமான கோயில்களின் பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு நானும் என்னுடைய உறவினர்களும் சேர்ந்துதான் ஈயம் பூசி வருகிறோம்,” என்று புன்செய் (புஞ்சை) என்ற கிராமத்தில் ஒரு குளத்து ஓரமாக புளியமரத்தடியில் ஒரு சிறிய பித்தளைச் சொம்புக்கு ஈயம் பூசிக்கொண்டிருந்த திரு சஞ்சீவி கூறினார். அப்போது அவரின் மணமாகாத மகள்கள் இரண்டு பேர் தற்காலிக அடுப்பில் மதிய உணவு சமைத்துக்கொண்டிருந்தனர்.
இந்த ஈயம் பூசும் கலைஞரின் மனைவிகளும் மகள்களும் விழாக்காலத்தின்போது கோயில்களுக்கு வெளியே பிளாஸ்டிக் பொருள்களை விற்று சம்பாதிக்கிறார்கள். அல்லது அத்தகைய பொருள்களுடன் ஊர் ஊராகச் சென்று விற்று பிழைக்கிறார்கள்.
“பித்தளைப் பாத்திரங்களைச் சமைக்கவோ, சமைத்த உணவை வைத்திருக்கவோ பயன்படுத்தவோ முடியாது. வேதிக் கிரியை ஏற்பட்டு பாத்திரத்தின் உள்ளே இருக்கும் உணவுப் பொருள் கச்சிப்போய்விடும். அதைப் பயன்படுத்த முடியாது.
“பித்தளைப் பாத்திரங்கள் சமையலுக்குப் பயன்பட வேண்டும் என்றால் அவற்றின் உட்புறத்தில் ஈயம் பூச வேண்டும். அப்போதுதான் அந்தப் பாத்திரம் பயன்படுத்துவதற்குத் தோதாக பக்குவப்படும்.
“காரீயம், வெள்ளீயம், துத்தநாகம் மூன்றையும் குறிப்பிட்ட அளவுக்கு எடுத்து ஒன்றாக காய்ச்சி ஈயத்தை தயார் செய்துகொள்ள வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“அந்த மூன்றும் சேர்ந்து ஒன்று திரண்டு வெள்ளை நிறத்தில் கட்டியான உலோகமாக ஆகிவிடும்.
“ஈயம் பூச வேண்டிய பாத்திரத்தை நெருப்பில் வைத்து சூடுபடுத்தி சூட்டோடு சூடாக காய்ச்சிய ஈயத்தை அதன் உள்ளே போட்டுவிட வேண்டும்.
“நீண்ட குறடு ஒன்றின் முனையில் துணி சுற்றி இருக்கும். அதைக் கொண்டு பாத்திரத்தின் உள்ளே காய்ச்சிய ஈயத்தை எல்லா இடத்திலும் படும்படி பலமுறை பூச வேண்டும். பூசும்போது புகைக் கிளம்பும். அது உடல்நலத்துக்கு நல்லதல்ல,” என்று திரு சஞ்சீவி ஈயம் பூசியபடியே விளக்கினார்.
ஈயம் பூசுவதற்கு முன்னதாக திரு சஞ்சீவி அந்தச் சொம்பை புளி, எலுமிச்சம் பழம், உப்பு மூன்றையும் போட்டு நன்றாகக் கழுவினார்.
சொம்பைச் சூடுபடுத்தியதும் அதன் உள்ளே நவச்சாரப் பொடியைப் போட்டு துணி சுத்திய குறடால் சுத்தப்படுத்தினார். நவச்சாரம் சொம்பின் உட்புறம் இருந்த அழுக்குகளை எல்லாம் வெளியேற்றிவிட்டது.
“இதற்குப் பிறகுதான் ஈயம் பூச வேண்டும். அப்படி பூசப்படும் ஈயம் பாத்திரத்தின் பயனீட்டைப் பொறுத்து ஐந்தாண்டு வரைகூட இருக்கும்.
“பொதுவாக ஈயம் பூசப்படும் பித்தளை, செம்புப் பாத்திரங்களை, இப்போது பயன்படுத்தப்படும் சபீனா போன்ற பொருள்களைக் கொண்டு துலக்கக்கூடாது. புளியைப் பயன்படுத்தித்தான் பாத்திரங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் அதிக நாள்களுக்கு ஈயம் அகலாமல் இருக்கும்.” என்றார் அவர்.
புளியமரத்துக்குக் கீழே தரையில் சிறிய குழியைத் தோண்டி அதில் லாரி டியூப் ஒன்றைப் புதைத்து ஒரு பக்கத்தை அழுத்தினால் குழியில் காற்று வரும்படி அடுப்பை அவர் அமைத்து இருந்தார்.
அந்தக் குழியில் கரியைப் போட்டு நெருப்பைப் பற்ற வைத்து அந்த டயரை அழுத்தினால் குழிக்கு காற்று வருகிறது. கரி பழுத்து நெருப்பாக மாறுகிறது. அதில்தான் அவர் பாத்திரங்களைச் சூடுபடுத்துகிறார். ஈயத்தையும் தயார் செய்கிறார். அந்த அடுப்புக்குத் துருத்தி என்று பெயர்.
திரு சஞ்சீவி, சிறிய சொம்புக்கு ஈயம் பூச ரூ.250 கூலி வாங்குகிறார்.
“100 கிராம் ஈயத்தைத் தயார் செய்ய ஒரு கிலோ நிலக்கரி தேவைப்படும். ஒரு சொம்புக்கு ஈயம் பூச 50 கிராம் ஈயம் தேவை,” என்றார் திரு சஞ்சீவி.
“அந்தக் காலத்தில் திருக்கடையூர் அபிராமி ஆலயத்தில் 16 பேர் சேர்ந்து தூக்கி வரும் அளவுக்கு ஒரு பெரிய அண்டா இருக்கும். அதில் தண்ணீர் எடுத்து வந்துதான் சாமிக்கு அபிஷேகம் நடக்கும். அந்த அண்டாவுக்கு நாங்கள்தான் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஈயம் பூசுவோம்.
“அப்படி பூசும்போது அந்த அண்டாவின் உள்ளே குறுக்கே மரப் பலகையைப் போட்டு அதன் உள்ளே இறங்கி பலகையில் அமர்ந்துகொண்டு நான் ஈயம் பூசுவேன். உடம்பு முழுவதும் துணியால் மூடி இருப்பேன். ஈயம் உடலில் பட்டால் உடல் வெந்து அந்த இடம் அப்படியே குழியாகிவிடும்.
“அந்தக் காலம் மலையேறிவிட்டது. பித்தளை, செம்பு அண்டா, குண்டான் எல்லாம் போய்விட்டது. மக்கள் பிளாஸ்டிக், எவர்சில்வருக்கு மாறிவிட்டார்கள்,” என்று சொன்ன திரு சஞ்சீவி, நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.1,000 சம்பாதித்தால்தான் கதை ஓடும் என்றார்.
ஈயம் பூசிய சொம்பைக் காட்டிய திரு சஞ்சீவி, ‘இந்தச் சொம்பு இப்போது சமையலுக்குப் பயன்படுத்துவதற்குத் தோதாக ஆகிவிட்டது. அதேபோலத்தான் நாமும் தேவைக்குத் தோதாக நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லாமல் சொன்னார்.
சஞ்சீவியிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டேன். காலம் மாறினாலும் அண்டா குண்டான் எல்லாம் மறைந்தாலும் சஞ்சீவி கூறுவதைப் போல் கைத்தொழில்தான் சிரஞ்சீவியாக இருக்கும் என்பது உண்மைதான்.

