நடைப்பயிற்சியை ஊக்குவிக்க அரசு மும்முரம்:தமிழ்நாடு முழுவதும் உடல்நல நடைபாதைகள்

நடைப்பயிற்சியை ஊக்குவிக்க அரசு மும்முரம்:தமிழ்நாடு முழுவதும் உடல்நல நடைபாதைகள்

2 mins read
d92450ca-c90b-4744-8c1b-3329642c01be
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் 8 கி.மீ. உடல்நல நடைபாதைப் பணிகள் நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 8 கி.மீ. தொலைவுக்கு உடல்நல நடைபாதை அமைக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்து இருக்கிறார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அமையவிருக்கும் அந்தப் பாதை நெடுகிலும் இரண்டு புறமும் மரங்கள் சூழ்ந்து இருக்கும். வழி நெடுகிலும் ஆங்காங்கே ரத்த அழுத்தம், சக்கரை அளவு போன்றவற்றைப் பரிசோதிக்க மருத்துவ அதிகாரிகள் இருப்பார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே இந்த உடல்நலப் பாதை பற்றி சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் இப்போது நடந்து வருவதாக அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மதுரையில் நடைபெறும் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் சுப்பிரமணியன், உடல்நலனிற்கு நடைப்பயிற்சி மிக முக்கியம் என்பதால் தமிழக மக்களிடையே அந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தரவும் அரசாங்கம் முயன்று வருவதாகக் குறிப்பிட்டார்.

உடல்நல நடைபாதை வழி நெடுகிலும் ஆங்காங்கே இருக்கைகள் இருக்கும். வழிகாட்டிப் பலகைகளும் அமைக்கப்பட்டு இருக்கும். உடல்நல அறிவிப்புப் பலகைகளும் இருக்கும். அவற்றில் உடல்நலம் பற்றிய பல வகையான கருத்துகளும் ஆலோசனைகளும் பரிந்துரைகளும் இடம்பெற்று இருக்கும்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று அந்தப் பாதைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்களுடன் கலந்துறவாடி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

நடைப்பயிற்சியில் ஈடுபடும் மக்களுக்கு வாரம் ஒரு நாள் இலவசமாக குடிநீரும் பழங்களும் கொடுக்கப்படும்.

எல்லா மாவட்டங்களிலும் உடல்நல நடைப்பாதையை அமைக்கும் பணிகள் அதிவேகமாக நடந்து வருவதாகவும் விரைவில் அந்தப் பாதைகள் திறந்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
உடல்நலம்