அதிகமான இந்தியர்கள் அமெரிக்கா பயணம்

சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை விஞ்சியது

அதிகமான இந்தியர்கள் அமெரிக்கா பயணம்

படம்: ராய்ட்டர்ஸ்

24 Jun 2023 - 12:22 pm

2 mins read

நியூயார்க்: இந்தியாவிலிருந்து கூடுதலானோர் வெளிநாடுகளுக்கு, அதுவும் குறிப்பாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். அதன் பொருட்டு, இந்தியாவில் இரு புதிய துணைத் தூதரகங்களைத் திறக்க அமெரிக்கா ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இந்த வாரம் அமெரிக்கா சென்றுள்ளார். அவரது பயணம், இருநாட்டு உறவுகளுக்குத் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.

சுற்றுப்பயணத்துறை ஆலோசனை நிறுவனமான ஐபிகே இன்டர்நேஷனலை பொறுத்தவரை, 2022ல் ஆசியாவிலேயே இந்தியாவிலிருந்துதான் ஆக அதிகமானோர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை, சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து சென்றோரை விஞ்சியதாக ஐபிகே இன்டர்நேஷனல் தெரிவித்தது.

இந்த நிலவரத்தை அமெரிக்க சுற்றுப்பயணத்துறை குறித்துக்கொண்டதாக தெரிகிறது.

அமெரிக்க வெளிநாட்டுப் பயண சங்கத்தின் தலைவரான ஜியோஃப் ஃப்‌ரீமேன், “இந்தியா போன்ற புதிய சந்தைகள் நீண்டகாலத்தில் நாங்கள் வளர உதவும்,” என்றார்.

இந்நிலையில், இந்தியாவின் பெங்களூரிலும் அகமதாபாத்திலும் இரு புதிய துணைத் தூதரகங்களை அமெரிக்கா திறக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் திரு மோடியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றோர் எண்ணிக்கை, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய நிலவரத்தில் இருந்த எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக அமெரிக்க வணிக தேசிய பயண, சுற்றுப்பயண அலுவலகத்தின் தரவு தெரிவிக்கிறது.

மற்ற நாடுகள், குறிப்பாக சீனா இதில் பின்தங்கியுள்ளது.

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டோர் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. 2019ல் அது எட்டாவது இடத்தில் இருந்தது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் துணைத் தூதரகங்களும் 2019ன் இதே காலகட்டத்தைவிட இவ்வாண்டு கூடுதலாக 44 விழுக்காடு விசா வழங்கியுள்ளன. இவ்வாண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான விசாவை வழங்கும் நிலையை நோக்கி அவை செல்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பயணம்பயணத்துறைஇந்தியாஅமெரிக்காமோடி