வாஷிங்டன்: இந்தியாவில் அடுத்த ஏழு ஆண்டுகளில் கூடுதலாக US$15 பில்லியனை முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளது.
இதனையும் சேர்த்து, இந்தியாவில் அமேசானின் மொத்த முதலீடுகள் US$26 பில்லியனைத் தொடும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமேசான் தலைமை நிர்வாகி ஆண்டி ஜெஸ்ஸி கூறினார்.
அரசுமுறை பயணமாக கடந்த வாரம் திரு மோடி அமெரிக்கா சென்றபோது வாஷிங்டனில் திரு ஜெஸ்ஸியை சந்தித்துப் பேசினார். புதிதாகத் தொழில் தொடங்கிய இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பது, வேலைகளை உருவாக்குவது, ஏற்றுமதிகளை மேம்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களையொட்டி இரு தலைவர்களும் பேசினர்.
பத்து மில்லியன் சிறிய தொழில்களை மின்னிலக்கமயமாக்கவும் 2030க்குள் இரண்டு மில்லியன் வேலைகளை உருவாக்கவும் அமேசான் உறுதி பூண்டுள்ளது.
அந்த இலக்கை நோக்கி அமேசான் திட்டமிட்டபடி செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே 6.2 மில்லியனுக்கும் அதிகமான சிறிய தொழில்களை மின்னிலக்கமயமாக்கி, 1.3 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை அமேசான் உருவாக்கியுள்ளது.
இந்திய சந்தையில் கால்பதித்து 10 ஆண்டுகால நிறைவை அமேசான் அண்மையில் கொண்டாடியது.