பெங்களூரு: கர்நாடக அரசு அறிவித்துள்ள இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதால், அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு தேவையான கூடுதல் அரிசியை வழங்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு சித்தராமையா கடிதம் எழுதினார். மத்திய அரசு இதனை நிராகரித்ததால் பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசியை கொள்முதல் செய்ய சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் 21ம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை கர்நாடக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பாவைச் சந்தித்துப் பேசினார்.
கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய உணவு கழகத்திடம் 300 லட்சம் டன் அரிசி இருப்பு உள்ளது. இப்போதைக்கு நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 135 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு மேலும் சில திட்டங்களை செயல்படுத்த இருப்பதால் சேமிப்பில் உள்ள அரிசியை வழங்க முடியாது என தெரிவித்தார்.
ஜூலை 1-ம் தேதி இந்த திட்டத்தை தொடங்காவிட்டாலும் பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் துணையுடன் இலவச அரிசி திட்டத்தை தொடங்க கர்நாடகா திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்சம் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முதல்வர் சித்தராமையா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.