கௌகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்யும் கனமழையினால் பிரம்மபுத்ரா நதியில் ஜோர்ஹட், துப்ரி மாவட்டங்களில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.
மனாஸ், பக்லாதியா, புதிமாரி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 10,782.8 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் நீரில்மூழ்கி உள்ளன. 4.27 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் 140 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு தங்கி உள்ளனர். இன்னும் பலர், சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் காலி இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா ஷர்மாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது போன்ற பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு உதவ போதுமான மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என அமித்ஷா உறுதி அளித்தார்.
கனமழை காரணமாக, காய்கறிகளின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் தத்தளிக்கும் மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

