என்ன நடக்கிறது இந்தியாவில்?: தரையிறங்கியதுமே பிரதமர் கேள்வி

2 mins read
cf0d49ee-ecf5-4f83-9ba2-995c160e6209
பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் சென்ற தலைவர்கள், திடீரென அவர் இப்படிக் கேட்டதும் திடுக்கிட்டனர்.  - கோப்புப்படம்

புதுடெல்லி: வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திங்கள்கிழமை இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும் இதர தலைவர்களையும் பார்த்து என்ன நடக்கிறது இந்தியாவில்? என்று கேட்டார்.

பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் சென்ற அந்தத் தலைவர்கள், திடீரென பிரதமரிடம் இருந்து கேள்வி கிளம்பியதைக் கேட்டு திடுக்கிட்டனர்.

திரு மோடி ஆறு நாள் அமெரிக்காவுக்கும் எகிப்திற்கும் பயணம் மேற்கொண்டுவிட்டு திங்கள்கிழமை அதிகாலை நேரத்தில் புதுடெல்லி திரும்பினார்.

இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பிரதமர் கேட்டதைச் செவிமடுத்த பாஜக தலைவர் நட்டா, பிரதமரைப் பார்த்து, “கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு கட்சித் தலைவர்கள் மக்களை எட்டி வருகிறார்கள். நாடு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றபோது பிரதமர் என்ன சொன்னார் என்று செய்தியாளர்கள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான மனோஜ் திவாரியிடம் கேட்டனர். அதற்குப் பதிலளித்த திவாரி, இந்த விவரங்களைக் குறிப்பிட்டார்.

திரு மோடி, ஜூன் 20ஆம் தேதி அமெரிக்க பயணத்தைத் தொடங்கினார். ஐநா தலைமையகத்தில் ஜூன் 21ஆம் தேதி அவர் ஒன்பதாவது அனைத்துலக யோகா தினத்தை நடத்திவைத்து வரலாறு படைத்தார்.

பிறகு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துச் சிறப்பித்தார்.

இரு தலைவர்களும் ஜூன் 22ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நடத்தினர். அதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் திரு மோடி உரையாற்றினார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் தம்பதியர் திரு மோடிக்கு விருந்தளித்துச் சிறப்பித்தனர்.

இந்தியப் பிரதமர் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது மிக முக்கிய உடன்பாடுகள் கையெழுத்தாயின.

அமெரிக்கப் பயணத்தை முடித்து கொண்டு திரு மோடி, ஜூன் 24ல் எகிப்தின் கெய்ரோ நகருக்குச் சென்று சேர்ந்தார். எகிப்திய பிரதமர் முஸ்தபா மேட்பௌலி பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார்.

எகிப்திய அதிபரை திரு மோடி சந்தித்தார். எகிப்து நாட்டின் ஆக உயரிய விருது திரு மோடிக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான உத்திபூர்வ உடன்பாடுகளை மேலும் வலுப்படுத்துதற்கான வழிகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.

குறிப்புச் சொற்கள்