புதுடெல்லி: லண்டனில் இருந்து புதுடெல்லிக்குப் பறந்து வந்த ஏர் இந்தியா விமானம் பருவநிலை சரியில்லாத காரணத்தினால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த விமானத்தை புதுடெல்லிக்கு ஓட்டிச் செல்ல விமானிகள் மறுத்துவிட்டனர். வேலை நேரம் முடிந்துவிட்டது என்று சொல்லி விமானத்தை அப்படியே நிறுத்திவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
விமானத்தில் இருந்த 350 பயணிகளும் சுமார் 3 மணி நேரம் தவியாய்த் தவித்தனர். கடைசியில் அவர்கள் புதுடெல்லியை அடைய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏஐ-112 விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு புதுடெல்லியில் தரையிறங்கவிருந்தது. ஆனால், புதுடெல்லியில் பருவநிலை சரியில்லாமல் இருந்ததால் விமானம் ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டது.
ஜெய்ப்பூரில் இருந்து புதுடெல்லிக்கு விமானம் புறப்படலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், விமானிகள் தங்களுடைய பணி நேரம் முடிந்துவிட்டது என்று விமானத்தை ஓட்டிச் செல்ல மறுத்துவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பயணிகள் பலரும் டுவிட்டரில் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். விமான நிறுவனமோ, விமான நிலைய அதிகாரிகளோ எந்த உதவியையும் செய்யவில்லை என்று அவர்கள் பரிதாபமாகக் கூறினர்.
ஏர் இந்தியா விமானம் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமானது.

