தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒடிசா: பேருந்துகள் நேருக்குநேர் மோதி 12 பேர் உயிரிழப்பு

1 mins read
8727af82-9fa9-4da5-b0a1-42b5f11d736d
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.  - படம்: ஒடிசா தொலைக்காட்சி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த திகபாகநாடி என்னும் ஊரில் திங்கட்கிழமை அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இதில் நான்கு பெண்கள் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த எட்டுப் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குடாரியில் இருந்து புவனேஸ்வர் மாவட்டம் ராயகடா பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், பேராம்பூரில் இருந்து திருமண வீட்டாருடன் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும் திகபாகநாடி என்ற பகுதியில் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். அந்த சோகத்தில் இருந்து அம்மாநில மக்கள் மீள்வதற்குள் கோரமான சாலை விபத்து 11 உயிர்களைப் பறித்துள்ளது.

கஞ்சம் மாவட்டத்தில் நடந்த இந்த விபத்து குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்