புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தங்கள் போராட்டம் நீதிமன்றத்தில்தான் நடக்கும். இனி சாலையில் போராட மாட்டோம் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பிரபல மல்யுத்த வீராங்கனைகளான சாக்சி மாலிக், வினேஷ் போகத், உள்ளிட்ட ஆறு வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.
பிரிஜ் பூஷன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடந்தது.
பின்னர், கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட முயன்றதை அடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும், ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தல் உள்ளிட்டவற்றை டெல்லி காவல்துறை அகற்றியது.
இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பை ஏற்று, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் சந்தித்துப் பேசினர். அப்போது, ஜூன் 15ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். இதை ஏற்று, போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அரசு அறிவித்தபடி, ஜூன் 15ஆம் தேதி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இனி எங்கள் போராட்டம் நீதிமன்றத்தில் தொடரும்; இனி சாலைக்கு வரமாட்டோம். மேலும், அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி, மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்வரை நாங்கள் காத்திருக்கப் போகிறோம்,” என்று வீராங்கனைகள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.