மோடி: என் எகிப்திய பயணம் புது வரலாறு படைத்த பயணம்

மோடி: என் எகிப்திய பயணம் புது வரலாறு படைத்த பயணம்

2 mins read
30cda6b1-7cd7-4354-b273-e89d3651f63c
எகிப்திய அதிபர் அப்தூல் ஃபத்தா அல் சிசியும் (வலது) இந்தியப் பிரதமர் மோடியும் எகிப்தில் இரு தரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர். - இபிஏ

புதுடெல்லி: எகிப்திற்குத் தான் மேற்கொண்ட பயணம் புதிய வரலாறு படைத்த பயணம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்து இருக்கிறார்.

அந்தப் பயணம், இருநாட்டு உறவில் புதிய ஊக்கத்தை உருவாக்கி இருக்கிறது என்றும் இரு நாட்டு மக்களுக்கும் அதனால் நன்மை ஏற்படும் என்றும் டுவிட்டரில் திரு மோடி குறிப்பிட்டார்.

இந்தியப் பிரதமர் அமெரிக்காவுக்கும் எகிப்திற்கும் ஆறு நாள் பயணம் மேற்கொண்டு இருந்தார். அவர் திங்கள்கிழமை காலையில் இந்தியா திரும்பினார்.

திரு மோடியின் எகிப்திய பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் பல உடன்பாடு கள் கையெழுத்தாயின.

பிரதமர் மோடியும் எகிப்திய அதிபர் அப்தூல் ஃபத்தா அல் சிசியும் அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி பேச்சு நடத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையில் மிக முக்கியமான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடு உள்ளிட்ட பல உடன்பாடுகளும் நான்கு புரிந்துணர்வு குறிப்புகளும் கையெழுத்தானதாக இந்தியாவின் வெளியுறவு செயலாளர் வினெய் வத்ரா தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரும் எகிப்திய அதிபரும் இருதரப்பு, உலக நிலவரங்கள் பற்றி விவாதித்த தாகவும் அவர் கூறினார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

எகிப்திய பிரதமர் முஸ்தபாவுடன் பிரமிடுகளைத் தான் பார்வையிட்டது பற்றியும் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டார்.

இரு நாடுகளின் கலாசாரச் செழுமை பற்றியும் வரும் ஆண்டுகளில் இருதரப்பு உறவை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்தும் தாங்கள் கலந்து பேசியதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

“எனக்கு எகிப்தின் ஆக உயரிய விருதை அளித்துச் சிறப்பித்தார்கள். அது அவர்கள் இந்தியாவையும் இந்திய மக்களையும் எந்த அளவுக்குச் சிறப்பாக போற்றுகிறார்கள், நேசிக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துவதாக இருக்கிறது,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

முதலாவது உலகப் போரின்போது எகிப்தில் மரணமடைந்த இந்திய வீரர்களுக்குத் திரு மோடி தமது எகிப்திய பயணத்தின்போது, அஞ்சலி செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்