தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலவசப் பேருந்துப் பயணம் இந்திய ஊழியரணியை உயர்த்தும்: பிரிட்டிஷ் நாளிதழ்

2 mins read
38b0a4b6-37f9-4e38-a284-6ac856896263
ஜூன் 11 முதல் கர்நாடகாவில் பெண்கள் இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம். - படம்: கோப்புப் படம்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் இந்தியாவின் ஊழியரணியில் அதிகப் பெண்களை இடம்பெறச் செய்ய உதவும் என்று பிரிட்டிஷ் நாளிதழான ‘த கார்டியன்’ தெரிவித்து உள்ளது.

கர்நாடகாவில் உள்ள அரசுப் பேருந்துகளில் தினமும் சுமார் 40 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். இலவச பயணத் திட்டத்தின்கீழ் இந்த எண்ணிக்கை 10 விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 4,700 கோடி ரூபாய் செலவாகும்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு அங்கு பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

`சக்தி’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தை ஜூன் 11 ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்திற்கு பெண்கள் மட்டுமில்லாது பலதரப்பினரிடம் இருந்தும் வரவேற்பு கிடைத்திருப்பதாக த கார்டியன் இணையச் செய்தி தெரிவிக்கிறது.

அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்வதை இந்தத் திட்டம் ஊக்குவிப்பதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்த இலவசப் பேருந்து பயணத்தினால் பல பெண்கள் பேருந்துகளில் செல்வதை விரும்புவார்கள். எனவே, தனியாக வாடகை வாகனங்களில் செல்வது குறையும். இதனால் சாலையில் வாகனப் போக்குவரத்து குறைந்து பருவநிலை மாற்றத்துக்கு உதவும் என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.

இந்தியாவின் ஊழியரணியில் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது. இது குறித்த தரவு ஒன்றை அண்மையில் உலக வங்கி வெளியிட்டது. பங்ளாதேஷ் ஊழியரணியில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 32 விழுக்காடு. அதேபோல இலங்கையில் இந்த விகிதம் சற்று அதிகமாக 34.5 விழுக்காடாக உள்ளது.

ஆனால், இந்தியாவில் மிகவும் குறைவாக 23 விழுக்காட்டுப் பெண்களே ஊழியரணியில் அங்கம் வகிக்கின்றனர்.

பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை வழங்கப்படுவது இந்தியாவில் இது முதல் முறை அல்ல. கடந்த 2019ஆம் ஆண்டு புதுடெல்லியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது சிறிய மாநிலம்.

தமிழ்நாட்டிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் குறைந்த தூரத்திற்கே பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு சலுகைக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவேதான் கர்நாடகத் திட்டம் பெண்களின் வாழ்க்கைமுறை மாற்றத்திற்கு வழிவகுப்பதாகக் கருதப்படுகிறது என ‘த கார்டியன்’ குறிப்பிட்டு உள்ளது. இந்தியாவில் பெண்களின் நடமாட்டம் பண வசதியால் கட்டுப்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்