மண்டி: இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பாகிபுல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உள்ளூர்வாசிகள் மற்றும் 200க்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்டி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை, அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும் சேதத்தை உண்டு பண்ணியுள்ளது.
இங்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 300க்கு மேற்பட்ட விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மழையால் தேசிய நெடுஞ்சாலை உள்பட 124 சாலைகள் சேதமடைந்துள்ளன.
அம்மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்டி - குலு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மின் விநியோகமும் சாலைப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் இயற்கை அழகை ரசிக்க அங்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகளும் தங்கள் விடுதிகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
மண்டி மாவட்டத்தின் ஆட் அருகில் உள்ள கோடிநாலாவில் பிரஷார் ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாகி பாலம் அருகே ஏராளமானோர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான இடங்களில் தங்கியிருப்போரைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மண்டி - ஜோகிந்தர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அந்தச் சாலை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாகச் செல்பவர்கள் சாலைகளில் தங்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மண்டி மாவட்டத்தில் ஐந்து நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையினைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பியாஸ் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. சிம்லாவின் பிறபகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது.
காங்ரா, மண்டி, சோலன் போன்ற நகரங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நகரங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்றும் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்படும் அபாயம் உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

