வாஸ்து: ஐந்து ஆண்டுகளாக மூடிக்கிடந்த கதவைத் திறந்துவைத்த கர்நாடக முதல்வர்

2 mins read
8b74b268-e2b4-44b6-8f42-c2ab5309d474
கர்நாடக மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் சித்தராமையா. - படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் தலைமைச் செயலகக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் முதல்வர் அலுவலகத்திற்கு இரண்டு வாயில்கள் உள்ளன.

மேற்கில் உள்ள வாயில் மட்டுமே இதுவரை பயன்பாட்டில் இருந்தது. தெற்கில் உள்ள வாயில், வாஸ்து காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடிக்கிடந்தது.

இதனை அறிந்த முதல்வர் சித்தராமையா, அதுகுறித்து செயலக அதிகாரிகளிடம் விசாரித்தார். தெற்கு வாயில் வழியாக அலுவலகத்திற்கு நுழையும் முதல்வர்கள் நீண்ட காலம் பதவியில் நீடிக்கமுடியாது என்று கூறினர். அதற்காகவே முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் அந்த வாயிலை மூடிவிட்டனர் என்பதை அதிகாரிகள் முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்தனர்.

அதைக்கேட்ட முதல்வர் சித்தராமையா, “சோதிடம், வாஸ்து போன்றவை மூடப்பழக்க வழக்கங்கள். இவற்றில் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. அந்தக் கதவை இனி திறந்து வையுங்கள். இனி தெற்கு வாயில் வழியாகவே நான் அலுவலகத்திற்குச் செல்வேன்,” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாயடைத்துப்போன அதிகாரிகள், ஐந்தாண்டுகளாக மூடிக்கிடந்த தெற்கு நுழைவாயிலை கடந்த திங்கள்கிழமை திறந்துவிட்டனர். அந்த வாயிலின் வழியாக அலுவலகத்திற்குள் நுழைந்த முதல்வர் சித்தராமையா, “நல்ல மனம், தூய இதயம், மற்றவர் மீது அக்கறை, அறைக்குள் நல்ல காற்று, நல்ல வெளிச்சம் இவையே சிறந்த வாஸ்து. வாஸ்து சரியில்லையென சுவர்களை இடித்துக்கட்டுவது, நுழைவாயிலை மாற்றியமைப்பது என்பது சரியல்ல,” என்று அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சித்தராமையா கடவுள் நம்பிக்கை கொண்டவர். இருப்பினும் மூடப்பழக்க வழக்கங்களில் நம்பிக்கையற்றவர்.

முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் கர்நாடகா மாநிலத்தை ஆள்பவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு ஒருமுறை சென்றுவிட்டு வந்தால்போதும் உடனே பதவி இழக்க நேரிடும் என்ற நம்பிக்கை அங்கு நீண்ட காலமாக இருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது அந்த மாவட்டத்திற்குச் செல்வதாக சவால் விட்டு அங்கு சென்று வந்தார். அதன் பின் ஐந்தாண்டுகள் முழுமையாக முதல்வராகப் பதவி வகித்தார்.