போபால்: ஒரு நாடு இரண்டு சட்டங்களின் பேரில் எப்படி செயல்பட முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
ஆகையால், ஒரே மாதிரியான சிவில் சட்டம் இந்தியாவுக்குத் தேவை என்று அவர் வலுவாக குரல்கொடுத்தார்.
தேர்தலை எதிர்பார்த்து இருக்கும் மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக உறுப்பினர்களிடையே செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி உரையாற்றினார்.
அரசியலில் வாக்கு வங்கிப் பாதையில் பாஜக எப்போதுமே செல்வதில்லை என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
ஒரே குடும்பத்திற்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டங்கள் எப்படி பொருந்தாதோ அதேபோல இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு செயல்பட முடியாது என்று திரு மோடி தெரிவித்தார்.
பாஜகவை உலகின் மிகப் பெரிய கட்சியாக உருவாக்கியதில் மத்தியப் பிரதேசத்துக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது என்று கூறிய அவர், பொதுவாக பாஜக தொண்டர்கள் குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு செயல்படுவதில்லை என்றும் அவர்கள் கடுமையான தட்பவெப்ப சவால்களை எதிர்கொண்டு மக்களைக் களத்தில் சந்திக்கிறார்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.