நாகாலாந்து வழியாக மணிப்பூருக்கு கடத்த முயன்ற ஆயுதங்கள், வெடிமருந்துகள் பிடிபட்டன

நாகாலாந்து வழியாக மணிப்பூருக்கு கடத்த முயன்ற ஆயுதங்கள், வெடிமருந்துகள் பிடிபட்டன

2 mins read
13758fb9-d258-4ff4-9dd6-a78b87b76b60
மணிப்பூரில் கலவரங்கள் இன்னமும் ஓயவில்லை. அண்மையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஓர் அரண்மனை வளாகத்தில் இருந்த ஒரு பண்டகசாலைக்குத் தீ வைக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம் 

நாகாலாந்து: அஸ்ஸாம் ரைஃபில்ஸ் படையும் கொஹிமா காவல்துறையும் பெரிய அளவிலான கடத்தல் முயற்சி ஒன்றை முறியடித்துள்ளன.

ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த ஆயுதங்கள் மணிப்பூர் மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படவிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகாலாந்தின் கொஹிமா நகர கூட்டு சிறப்பு தளபத்தியம் செவ்வாய்க்கிழமை இந்த விவரங்களைத் தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் இரண்டு கைத்துப்பாக்கிகளும் பெரிய துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் குண்டுகளை வெடிக்கச் செய்யும் சாதனங்களும் வெடிகுண்டுகளும் இதர பொருள்களும் அடங்கும் என்று அந்த மாநில தற்காப்புத் துறையின் பொது உறவு அலுவலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

நாகாலாந்து வழியாக மணிப்பூருக்கு ஆயுதங்களைக் கடத்த முயற்சிகள் நடப்பதாக அதிகாரிகளுக்கு முன்னதாக ரகசியத் தகவல்கள் கிடைத்தன.

அதையடுத்து அஸ்ஸாம் ரைஃபில்ஸ் படையும் கொஹிமா காவல்துறையும் ஜூன் 26ஆம் தேதி அதிகாலை 2 மணிக்குத் திடீர் நடவடிக்கைகளை எடுத்தன.

ஒரு வாகனத்தை பார்த்த அதிகாரிகள் அதைக் கண்காணித்தபடியே இருந்தனர். அதிகாலை 6 மணிக்கு அதிகாரிகள் அந்த வாகனத்தைச் சோதனையிட்டனர்.

மொத்தம் 1,100 ஆயுதங்கள், 13,702 வெடி மருந்துகள், 250 வெடி குண்டுகள் இதுவரையில் மீட்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து நாகாலாந்தின் பல பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மணிப்பூர் காவல்துறை தெரிவித்தது.

மணிப்பூரில் கடந்த 52 நாள்களாக இனக் கலவரங்கள் நடந்து வருகின்றன. இதுவரையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் மாண்டுவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாஜக ஆளும் அந்த மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

குறிப்புச் சொற்கள்