புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த முக்தா குப்தா, கடந்த ஜூன் 27ஆம் தேதி பணி ஓய்வுபெற்றார்.
தான் பணி ஓய்வுபெறவிருந்த அந்த நாளில் மட்டும் அவர், 2018ஆம் ஆண்டில் இருந்து நிலுவையில் கிடந்த 65 குற்றவியல் வழக்குகளுக்குத் தீர்ப்பளித்து சாதனை படைத்துள்ளார். அதற்காக நீதிபதி முக்தா குப்தாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இவர் டெல்லி அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, ஜெஸிகா லால், நைனா சாஹ்னி, நிதீஷ் கட்டாரா போன்ற பிரபல கொலை வழக்குகளில் வாதாடியவர்.
நீதிபதி பூனம் பம்பாவுடன் இருந்த அமர்வில் 55 வழக்குகளிலும், நீதிபதி அனீஷ் தயாளுடன் இருந்த அமர்வில் 10 வழக்குகளிலும் நீதிபதி முக்தா குப்தா தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் ஒரு வழக்கில் மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் 12 வயதுச் சிறுவனைக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டி கொலை செய்த வழக்கில் ஜீவக் நாக்பால் என்பவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி முக்தா குப்தா.

