உலகளவில் இந்தியா இரண்டாமிடம்; சீனாவைப் பின்னுக்குத் தள்ளியது
புதுடெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 1.45 லட்சம் கி.மீ. அளவுக்கு சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, மிக நீண்ட சாலைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக அரசு கடந்த 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் இதுவரை 1.45 லட்சம் கி.மீ. அளவுக்குச் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, சாலை வசதி உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
“அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா சாலை வசதியில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏராளமான கிரீன்பீல்டு விரைவுச் சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மிக நீண்ட டெல்லி-மும்பை விரைவுச் சாலை கட்டமைப்புப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) ஏறக்குறைய இறுதி செய்துள்ளது.
“ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் சாலை கட்டமைப்பு 91,287 கி.மீ. ஆக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் விரைவுச் சாலை, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டன.
“2019 ஏப்ரலில் இருந்து என்எச்ஏஐ 30,000 கி.மீ. அளவுக்கு அதிகமான நெடுஞ்சாலைகளை நாடு முழுவதும் அமைத்துள்ளன.
“அதன்விளைவாக, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.4,770 கோடியாக இருந்த சுங்க கட்டண வசூல் இன்று ரூ.41,342 கோடியாக அதிகரித்துள்ளது.
இதனை ரூ.1.30 லட்சம் கோடியாக உயர்த்துவதே மத்திய அரசின் தற்போதைய இலக்கு என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.