ஹஜ்ஜு பெருநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து

ஹஜ்ஜு பெருநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து

1 mins read
905774bf-4b8b-4746-9396-24443e2aaccb
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலின் முன்பு ஹஜ்ஜுப் பெருநாளான நேற்று ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்தப் பெருநாள் அன்பு மற்றும் தியாகத்தின் புனித நாளாகும். தன்னலமின்றி மனித குலத்திற்குச் சேவை செய்யவும் இந்தத் திருவிழா நம்மைத் தூண்டுகிறது. இந்த தருணத்தில் சமுதாயத்தில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் அதிகரிக்க நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்,” என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தப் பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். மேலும் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்,” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தப் பெருநாள் தியாகம், நம்பிக்கை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் உன்னத விழுமியங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்தவும், அமைதியான, இணக்கமான மற்றும் முற்போக்கான சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் நாம் உறுதிகொள்வோம்,” என கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்