உனக்கோட்டி: திரிபுரா மாநிலத்தில் நடந்த தேர்த் திருவிழாவில் தேரில் மின்சாரம் பாய்ந்து மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 16 பேர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அசம்பாவிதத்திற்கு திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.
உனகோட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயிலில், கடந்த 10 நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தபோது தேரின் மேற்பகுதி, உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இந்தச் சம்பவத்தில் தேர் இழுத்த பக்தர்கள் 7 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் குமார்காட் பகுதியில் உள்ள உத்தர பாபியசெரா என்னும் சிற்றூரில் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சாரம் பாய்ந்த கொஞ்ச நேரத்தில் தேரின் சில பகுதிகளில் தீ பற்றி எரிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார்.
துறை ரீதியில் விசாரணை நடத்தி விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மின்சாரத்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், திரிபுரா மின்சார வாரியத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் திரிபுரா மாநில அரசு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை நிவாரண நிதி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.