தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வியட்னாமுக்குப் போர்க்கப்பல் வழங்கிய இந்தியா

1 mins read
07504fa1-be96-482f-bb0c-4ba2ff8f1bdc
இந்தியாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பல், புதன்கிழமையன்று இந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்து கிளம்பியதாகக் கடற்படை தெரிவித்தது.  - கோப்புப்படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியா முதல்முறையாக ஒரு நாட்டுக்குப் போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது. இந்தியக் கடற்படையின் ஏவுகணை கொர்வட் போர்க்கப்பல் தற்போது வியட்னாமுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பல், புதன்கிழமையன்று இந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்து கிளம்பியதாகக் கடற்படை தெரிவித்தது.

இந்தியாவும் வியட்னாமும் அண்மை ஆண்டுகளில் நட்புறவை வலுப்படுத்திக் கொண்டுள்ளன. இதில் தற்காப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் அதிகாரத் தோரணை அதிகரித்து வருவது குறித்து இரு நாடுகளும் அக்கறை கொண்டிருப்பது இதற்குக் காரணம்.

இந்தியா இதற்குமுன் மாலத்தீவு, மொரி‌ஷியஸ் போன்ற நாடுகளுக்குச் சிறிய படகுகளும் ராணுவக் கருவிகளும் கொடுத்திருக்கிறது. மியன்மாருக்கு நீர்மூழ்கிக் கப்பல் தந்திருக்கிறது.

ஆனால், தென்சீனக் கடலைக் கரையாகக் கொண்ட சீனாவின் அண்டை நாட்டுக்கு இந்தியா போர்க்கப்பல் கொடுப்பது இதுவே முதல் முறை.

வியட்னாமியத் தற்காப்பு அமைச்சர் பான் வான் கியாங் இம்மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகையளித்தபோது அன்பளிப்பு அறிவிக்கப்பட்டது.

இந்தப் போர்க்கப்பல் 1991 முதல் இந்தியக் கடற்படையில் பயன்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, சீனத் தற்காப்பு அமைச்சர் லீ ‌ஷாங்ஃபூ, வியட்னாமியத் தற்காப்பு அமைச்சரைச் சந்தித்த பிறகு, மேல்மட்டத் தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த ஹனோயுடன் பெய்ஜிங் சேர்ந்து செயல்பட விரும்புவதாகச் செவ்வாய்க்கிழமை கூறினார்.

குறிப்புச் சொற்கள்