புதுடெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். ஆனால் பாதிக்கப்பட்டோர் தங்கியிருந்த முகாமுக்குச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
தமது பயணத்தின்போது வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்து ஆறுதல் கூற ராகுல் திட்டமிட்டிருந்ததாக காங்கிரஸ் கட்சியினர் கூறினர்.
மணிப்பூரில் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக வன்முறை நீடிக்கிறது. நூற்றுக்கு மேற்பட்டோர் அந்தக் கலவரங்களில் உயிர்நீத்தனர்.
இந்நிலையில் இம்பால் நகரத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்து சுராசந்த்பூர் முகாமில் தங்கியிருக்கும் மக்களைச் சந்திக்கச் சென்றபோது பிஷ்ணுபூர் எனுமிடத்தில் காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
“வன்முறையின் மையப்பகுதியான சுராசந்த்பூருக்கு ராகுல் செல்வதால் அங்கு மீண்டும் வன்செயல்கள் நடக்கக்கூடும். அதனால் முன்னெச்சரிக்கையாக அவரைத் தடுத்து நிறுத்தினோம்,” என்று அதிகாரிகள் கூறினர்.


