ரூ.4 கோடி காப்புறுதி பெறுவதற்காக தோழனைக் கொன்று நாடகம்

ரூ.4 கோடி காப்புறுதி பெறுவதற்காக தோழனைக் கொன்று நாடகம்

2 mins read
c7e34e1b-86f5-474a-b470-2531978677af
படம்: - தமிழ் முரசு

அமிர்தசரஸ்: காப்புறுதிப் பணம் ரூ.4 கோடி பெறுவதற்காக தொழிலதிபர் ஒருவர், தனது நண்பரைக் கொலை செய்து நாடகமாடியுள்ளார்.

இந்தச் சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின் ராம்தாஸ் நகரில் நடந்துள்ளது. தனியார் நிறுவனம் நடத்தி வந்தார் குர்ப்ரீத் சிங். அவரது தொழிலில் நட்டம் ஏற்பட்டது. அதைச் சரிப்படுத்த தனது காப்புறுதிப் பணம் ரூ.4 கோடியைப் பெறத் திட்டமிட்டார்.

இதற்காக தனக்கு போலி மரணத்தை ஏற்படுத்த திட்டமிட்டார். சைன்பூர் பகுதியை சேர்ந்த சுக்ஜீத் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நண்பரைப் போல் அவருடன் நெருக்கமாக பழகினார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முதல் சுக்ஜீத்தை திடீரென காணவில்லை. அவரை அவரது மனைவி ஜீவன்தீப் கவுர் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை அதிகாரிகள் சுக்ஜீத்தை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் பாட்டியாலா சாலையில் உள்ள கால்வாய் அருகே சுக்ஜீத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது குர்ப்ரீத் சிங், தனது கணவருக்குத் தொடர்ந்து மது வாங்கி கொடுத்ததாக சுக்ஜீத்தின் மனைவி காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள் குர்ப்ரீத் சிங்கை பிடித்து விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் குர்ப்ரீத் சிங் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அவர்கள் மீது சந்தேகப்பட்ட காவல்துறை அதிகாரிகள், அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், காப்புறுதிப் பணம் ரூ.4 கோடி கிடைப்பதற்காக, தான் இறந்துவிட்டதாக சுக்ஜீத்தைக் கொன்று நாடகமாடியது தெரியவந்தது.

இதற்கு உடந்தையாக குர்ப்ரீத் சிங்கின் மனைவி குஷ்தீப் கவுர் மற்றும் சுக்விந்தர் சிங் சங்கா, ஜஸ்பால்சிங், தினேஷ்குமார் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுதொடர்பாக குர்ப்ரீத் சிங், அவரது மனைவி உள்ளிட்ட 6 ஆறு பேரை காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்