மணிப்பூர் வன்செயல் ஓயவில்லை; முதல்வர் பதவி விலகல் நாடகம்

மணிப்பூர் வன்செயல் ஓயவில்லை; முதல்வர் பதவி விலகல் நாடகம்

2 mins read
5af7c4cc-172b-494a-b8de-cb199eb87f6e
சூரசந்த்பூர் முகாமில் உள்ள மக்களையும் பிள்ளைகளையும் வெள்ளிக்கிழமை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். - படம்: இந்திய ஊடகம் 

இம்பால்: இந்தியாவின் வடமேற்கு மாநிலமான மணிப்பூரில் இனக்கலவரம் மூண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓடிய நிலையில் அங்கு வன்செயல்கள் ஒடுங்கியதாகத் தெரியவில்லை.

அந்த மாநிலத்தில் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குப் பிறகு வன்முறை மீண்டும் உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களும் பாதுகாப்புப் படையினரும் மோதிக் கொண்டதில் வியாழக்கிழமை மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மணிப்பூரில் மேதேயி சமூகத்தினருக்கும், நாகா, குக்கி பழங்குடி பிரிவினருக்கும் மே 3ஆம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை ஓயவில்லை.

மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53% மக்கள் இருக்கும் மேதேயி சமூக மக்களைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த மாநிலத்தின் முதல்வர் என். பைரன் சிங் பதவியில் இருந்து விலகிவிட முடிவு செய்து ஆளுநர் அனுசுயா உய்கியை சந்தித்து பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகைக்குச் சென்றதாகத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அவரின் ஆதரவாளர்கள் அவரின் வாகனங்களைத் தடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் பதவி விலகக் கூடாது என்று அவருடைய வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடி மனிதச் சங்கிலி அமைத்தனர். முதல்வர் பதவி விலக மாட்டார் என்று உறுதி தெரிவிக்கப்ப்டடதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றதாக ஊடகத் தகவல்கள் கூறின.

இதனிடையே, மணிப்பூர் வன்செயலில் மாண்டவர்களின் எண்ணிக்கை 130ஐ கடந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 30,000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் அடைந்து கிடக்கிறார்கள்.

மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. வன்செயல்கள் ஓயாததால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மணிப்பூருக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு முகாம்களில் தங்கி இருக்கும் மக்களை காங்கிரஸ் முக்கிய பிரமுகர் ராகுல் காந்தி சந்தித்தார்.

ஹெலிகாப்டரில் மணிப்பூர் சென்ற அவர், முன்னதாக அந்த மாநில ஆளுநரையும் சந்தித்தார்.

‘‘மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும். சில முகாம்களுக்குச் சென்றேன். அவற்றில் மக்களுக்கு பல பற்றாக்குறைகள் ஏற்பட்டு இருக்கின்றன. அவற்றைக் களைய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று ராகுல் காந்தி கூறினார்.

குறிப்புச் சொற்கள்