மாஸ்கோ: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டம் அந்த நாட்டு பொருளியலில் கண்கூடான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்ததாக ஆர்டி செய்தி நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.
‘‘ரஷ்யாவின் மாபெரும் நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தயாரிப்போம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.
‘‘அந்தத் திட்டம் இந்தியாவில் கண்கூடான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது,’’ என்று மாஸ்கோவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் குறிப்பிட்டார்.
இந்தியாவைப் பின்பற்றி ரஷ்ய மக்களும் உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் இந்தியா-ரஷ்ய சிறப்பு உத்திப்பூர்வ பங்காளித்துவ உறவு மலர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வலுவடைந்து வருகிறது என்று சில நாள்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.
‘‘ரஷ்யாவை பற்றி அன்றாடம் பொய்ச் செய்திகள் கிளப்பிவிடப்படுகின்றன. இந்தியா-ரஷ்யா உறவை கெடுக்க பல செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன,’’ என்று அந்தத் தூதர் புதுடெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தெரிவித்து இருந்தார்.