கிராம வளர்ச்சியை எடைபோட பஞ்சாயத்து வளர்ச்சி குறியீடு

கிராம வளர்ச்சியை எடைபோட பஞ்சாயத்து வளர்ச்சி குறியீடு

2 mins read
de565256-ca40-4074-aca9-4ac136db0252
இந்திய கிராமம் - படம்: இணையம்

புதுடெல்லி: மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மொரேஷ்வர் பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “கிராமங்களின் வளர்ச்சியை மதிப்பிட ‘பஞ்சாயத்து வளர்ச்சி குறியீட்டு எண்’ என்ற புதிய முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, நிலையான வளர்ச்சி இலக்குகளாக ஐ.நா. சபை அடையாளம் கண்ட சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட ஒன்பது அம்சங்கள், ஒவ்வொரு கிராமத்திலும் எந்த நிலையில் உள்ளது என்ற அடிப்படையில், அந்த கிராமத்தின் வளர்ச்சி மதிப்பிடப்படும்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் மதிப்பெண் போடப்படும். மதிப்பெண் அடிப்படையில், 4 வகையான தகுதிநிலைகள் ஏற்படுத்தப்படும்.

இதில் 40 சதவிகிதத்துக்கு குறைவான மதிப்பெண் பெறும் கிராமங்கள் ‘டி’ தரநிலை என்றும், 40 முதல் 60 சதவிகித மதிப்பெண்கள் பெறும் கிராமங்கள் ‘சி’ தரநிலை என்றும், 60 முதல் 75 சதவீத மதிப்பெண் பெறும் கிராமங்கள் ‘பி’ தரநிலை என்றும், 75 முதல் 90 சதவீத மதிப்பெண் பெறும் கிராமங்கள் ‘ஏ’ தரநிலை என்றும் தரம் பிரிக்கப்படும்.

90 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெறும் கிராமங்கள் ‘ஏ பிளஸ்’ என்று தரம் பிரிக்கப்படும். இந்த அடிப்படையில், சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு என்னென்ன வசதிகள் தேவை, அவற்றை எப்படி மேம்படுத்துவது என்று ஆலோசித்து செயல் திட்டம் வகுக்கப்படும்.

முதலில், சோதனை அடிப்படையில், இந்த மதிப்பீட்டு முறை, மராட்டிய மாநிலத்தின் புனே, சங்க்லி, சதாரா, சோலாப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பின்பற்றப்பட்டது. அதில், 70 சதவிகித கிராமங்கள், ‘சி’ பிரிவில் இருப்பது தெரியவந்தது. எனவே, அவை பின்தங்கிய நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டது.

நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமங்களுக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம்,” என்று அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்