பூனா: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்துக்கொண்டதில் குறைந்தது 25 பேர் மாண்டுவிட்டனர். உயிரிழந்தோரில் மூன்று சிறுவர்களும் அடங்குவர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாக்பூரிலிருந்து பூனா சென்றுகொண்டிருந்த பேருந்து சம்ருதி பகாமார்க் விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை பின்னிரவு இரண்டு மணியளவில் தீப்பிடித்துக்கொண்டது. பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தோர் புல்தானா சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக துணை சூப்பரின்டெண்டன்ட் பாபுராவ் மகாமுனி கூறினார். சக்கரம் வெடித்ததால் சாலையில் இருந்த கம்பத்திலும் தடுப்பிலும் மோதிய பேருந்து தீப்பிடித்துக்கொண்டு கவிழ்ந்தது; உயிர் தப்பிய பேருந்து ஓட்டுநர் இதைத் தெரிவித்ததாக காவல்துறை சூப்பரின்டெண்டன்ட் சுனில் கடாஸ்னெ கூறினார்.
இச்சம்பவத்தில் மாண்டோரின் குடும்பத்தாருக்கு ஐநூறாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். அவரின் அலுவலகம் இதைத் தெரிவித்தது.
இது பேரதிர்ச்சி தரும் சம்பவம் என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபாட்னவிஸ் கூறியுள்ளார். சம்பவம் நிகழ்ந்த மாவட்டத்தின் அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
காயமடைந்தோரின் சிகிச்சைக்கான செலவை மாநில அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருத்தம் தெரிவித்தார். காயமடைந்தோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யயநாத் ஆகியோரும் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துக்கொண்டனர்.