தண்ணீர் போதவில்லை; காவிரியைத் திறந்துவிட முடியாது

தண்ணீர் போதவில்லை; காவிரியைத் திறந்துவிட முடியாது

2 mins read
1bc7d5e2-5b15-4243-ab9b-3a0ed787ed8f
தமிழகத்துக்கு காவிரியைத் திறந்துவிட முடியாது என டி.கே.சிவக்குமார் அறிவிப்பு - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடகாவில் பருவமழை பற்றாக்குறையால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த முறை தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை என்று கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்களை நேரில் சந்திக்கும் நோக்கத்தில் டெல்லி சென்றுள்ள டி.கே.சிவக்குமார், அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை. அதனால் கிருஷ்ணராஜ சாகர் உள்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காவிரி நிர்வாக ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த முறை தண்ணீர் வழங்க வாய்ப்பு இல்லை என்றார் அவர்.

நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை

மேகதாது அணைக்கு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் வலியுறுத்தியுள்ள நிலையில், கர்நாடகத்தின் நச்சு திட்டத்தை முறியடிக்க தமிழகத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார். 

“மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல்மடை பாசன மாநிலத்திற்கும், கடைமடை பாசன மாநிலத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை அறியாமல், இரு மாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த கர்நாடக அமைச்சர் சதி செய்வது கண்டிக்கத்தக்கது,” என்று அவர் கூறியுள்ளார்.

மேகதாது அணையை தடுப்பது மட்டுமின்றி, தமிழகத்திற்கான குடிநீர் திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு, 2018ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது.

தொடர்புடைய செய்திகள்

மேலும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது.

மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது, தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.