பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியின்போது 2022ஆம் ஆண்டு மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு இந்தச் சட்டத்தை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சர்களின் ஒப்புதல் கடந்த 15ஆம் தேதி பெறப்பட்டது.
இந்நிலையில், அச்சட்டத்தை அகற்றுவதற்கு, பாஜக ஆதரவாளர்களும் பல்வேறு இந்து அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அந்தச் சட்டம் அகற்றப்பட்டால் மாநிலளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மங்களூருவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மடாதிபதிகள், சாதுக்கள் மாநாட்டில் இந்த சட்டத்தை ரத்து செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒடியூர் மடாதிபதி குரு தேவானந்த சுவாமி கூறும்போது, ‘‘மதமாற்றத் தடைச் சட்டத்தை அகற்றுவதை மடாதிபதிகள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
“கர்நாடக அரசின் இந்த முடிவால் எங்களது மனம் புண்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை நீக்குவது குறித்த முடிவை அரசாங்கம் கைவிடவேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“எங்களது கோரிக்கையை அரசாங்கம் ஏற்காவிடில் மாபெரும் போராட்டம் வெடிக்கும்,” என்று குரு தேவானந்த சுவாமி கூறியுள்ளார். முன்னதாக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து அவரிடம் தங்கள் கோரிக்கை முன்வைக்க இருப்பதாக அவர் கூறினார்.

