கேரளாவில் பருவமழை தீவிரம்: நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

1 mins read
963bbbaf-3f9a-48a2-9f91-0d2b8423fc18
கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு அங்கு பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து கேரளாவின் பல பகுதிகளில் ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர் கோடு, கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் 204.4 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள், நிவாரண முகாம்களுக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டுமென கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.