குஜராத் கலவர வழக்கு: சமூக ஆர்வலர் தீஸ்தாவின் பிணை மனு தள்ளுபடி

குஜராத் கலவர வழக்கு: சமூக ஆர்வலர் தீஸ்தாவின் பிணை மனு தள்ளுபடி

2 mins read
7119fab2-a557-477a-a14d-d080fc652189
சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட். - படம்: இந்திய ஊடகம்

அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து அந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் என்பவர் பொய்யான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் உருவாக்கியதாக அவர் மீது, குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைதுசெய்தது.

அப்போது தனக்குப் பிணை வழங்குமாறு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுச்செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த மன்றம் 2022ஆம் ஆண்டு அவருக்குப் பிணை வழங்கி சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது.

தீஸ்தா சீதல்வாட் பிணை மனு குறித்து இனி குஜராத் உயர் நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருந்த பிணைக்காலம் நிறைவடைந்த நிலையில் தீஸ்தா சீதல்வாட், குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிணை மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்தப் பிணை மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்ததோடு, தீஸ்தா சீதல்வாட் உடனடியாக காவல்துறையில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மும்பையில் வசித்து வருகிறார். குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் விரைவில் காவல்துறையில் சரணடைவார் என்று தெரிகிறது. இல்லையெனில் அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்