திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வசிக்கும் மக்கள் ஒருவித புதுமையான கலாசாரத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
அதாவது, திருமணம் முடிந்த பின் மணமகனின் வீட்டில் மணமகள் காலடி எடுத்து வைப்பதற்கு முன் தம்பதியரின் தலையைச் சேர்த்துப் பிடித்து முட்டவைக்கும் சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
இதுபோல், கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு, கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சச்சின் என்பவருக்கும் கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்த சஜ்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
அருகே உள்ள திருமண மண்டபத்தில் மணம் புரிந்த தம்பதியர் பாலக்காட்டில் உள்ள மணமகன் வீட்டுக்கு வருகை புரிந்தனர். மணமக்களை வீட்டின் முன் வைத்து சச்சினின் தாய் ஆரத்தி எடுத்தார்.
அதன்பின்னர் அவர்களுக்குப் பின்னால் தயாராக நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுபாஷ் என்பவர், இருவரது தலையையும் சேர்த்துப் பிடித்து முட்டவைத்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுபாஷ் தன்னுடைய சக்தி முழுவதையும் பயன்படுத்தி முட்ட வைத்ததால் தம்பதியர் இருவருக்கும் தலையில் கடும் வலி ஏற்பட்டது.
இதனால் மணமகள் சஜ்லா தலையைப் பிடித்துக்கொண்டு அழுதபடியே வீட்டுக்குள் சென்றார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
மணமகள் சஜ்லா வலியால் துடித்ததைப் பார்த்த அனைவரும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இதுதொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கொல்லங்கோடு காவல்நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சச்சின், சஜ்லாவை விசாரித்த கொல்லங்கோடு காவலர்கள், சச்சினின் பக்கத்து வீட்டுக்காரரான சுபாஷைக் கைது செய்தனர்.

