புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தின் தேசியவாத கட்சித் தலைவரான சரத் பவார், வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான தனது போர் தொடங்கிவிட்டது என்று அறிவித்துள்ளார்.
“நான் எனது கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன்,” என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
திரு சரத் பவார், குரு பூர்ணிமாவை முன்னிட்டு மகாராஷ்டிராவின் சாதரா மாவட்டத்தின் காரத் பகுதியில் மாநிலத்தின் முதல் முதல்வரும் தனது வழிகாட்டியுமான யஷ்வந்த் ராவ் சாவனின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு தனது ஆதரவாளர்களிடம் சரத் பவார் பேசினார்.
“இன்று நாட்டில் சில குழுக்களால் சாதி மற்றும் மதத்தின் பெயரால் கலகங்கள் உருவாக்கப்படுகின்றன. கிளர்ச்சியாளர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள், அதற்கு காலக்கெடு உள்ளது,” என்று திரு சரத் பவார் சொன்னார்.
“நாங்கள் உத்தவ் தாக்கரே தலைமையின் கீழ் மகாராஷ்டிர மக்களுக்கு சேவை செய்தோம். ஆனால், சிலரால் எங்களின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளிலும் இதுவே நடந்துள்ளது. எதிர்க்கட்சிகளை பாஜக அழிக்க நினைக்கிறது. சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
“தேசியவாத காங்கிரசை உடைக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் உண்மையான இடம் எது என்பதை நாங்கள் காண்பிப்போம். வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போர் இன்று தொடங்குகிறது. இதுபோன்ற கிளர்ச்சிகள் நடக்கத்தான் செய்யும். தேசியவாதக் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சரத் பவார் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவரது அண்ணன் மகன் அஜித் பவார், 40 எம்எல்ஏக்களுடன் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். உடனடியாக, அவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களான 8 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் சரத் பவாரின் சூளுரை வெளியாகியுள்ளது.