புதுடெல்லி: ஆளும் பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தொடர்ந்து அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்று கபில் சிபில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. இருப்பினும் முதல் அமைச்சர் பதவிப் பகிர்வில் பிரச்சினை ஏற்பட்டது. அதையடுத்து பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டது.
அப்போது, தனது கொள்கைக்கு முரண்பட்ட தேசியவாதக் காங்கிரஸ், காங்கிரசுடன் இணைந்து அப்போதைய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்தார். சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தினார் ஏக்நாத் ஷிண்டே. அதனையடுத்து 2022 ஜூன் மாதம், உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கலைப்பதாக அறிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவரின் ஆதரவாளர்களுடனான சிவசேனா கட்சியும் பாஜகவும் இணைந்து ஆட்சி அமைத்தன. ஏக்நாத் ஷிண்டே முதல் அமைச்சராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல் அமைச்சராகவும் பதவியேற்றனர்.
இந்த நிலையில் இப்போது மகாராஷ்டிராவில் முக்கிய எதிர்க்கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கபில் சிபல் தனது டுவிட்டரில், “பாஜகவின் பதவித் தூண்டுதலால் கவிழ்க்கப்பட்ட எதிர்க்கட்சி அரசாங்கங்கள் விவரம்: உத்தரகாண்ட் அரசு (2016) அருணாச்சல பிரதேச அரசு (2016), கர்நாடகா அரசு (2019), மத்திய பிரதேச அரசு (2020), மராட்டிய அரசு (2022). இப்போது இதையெல்லாம் சட்டம் அனுமதிக்கிறதா..?? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்,” என்று அதில் கபில் சிபல் பதிவிட்டுள்ளார்.