நெடுஞ்சாலையில் சென்றபோது நான்கு வாகனங்கள்மீது மோதி, பின்னர் சாலையோரம் அமைந்திருந்த உணவகத்தில் சரக்கு வாகனம் புகுந்ததில் குறைந்தது 15 பேர் மாண்டுபோயினர்; 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.
தலைநகர் மும்பையிலிருந்து ஏறக்குறைய 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் துலே மாவட்டம் வழியாகச் செல்லும் மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் காலை 10.45 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சரக்கு வாகனத்தின் நிறுத்துவிசை செயலிழந்ததால் அதன் ஓட்டுநரால் வாகனத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் போனதாகக் கூறப்பட்டது.
அது இரண்டு மோட்டார்சைக்கிள்கள், ஒரு கார், இன்னொரு சரக்கு வாகனம் ஆகியவற்றின்மீது மோதியது.
பிறகு அந்தச் சரக்கு வாகனம், அங்கிருந்த ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு அருகே இருந்த உணவகத்தினுள் புகுந்தது. பின்னர் அது தலைக்குப்புறக் கவிழ்ந்து கிடந்ததைக் காணொளிகள் காட்டின.
அந்தச் சரக்கு வாகனம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரிலிருந்து துலே நோக்கிச் சென்றுகொண்டு இருந்ததாகக் கூறப்பட்டது.
பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருந்தவர்களில் சிலரும் மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
காயமடைந்தவர்கள் ஷிர்பூர், துலேயில் செயல்படும் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
விபத்தைத் தொடர்ந்து, மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது; வாகனங்கள் வேறு சாலைகளில் செல்லும்படி திருப்பிவிடப்பட்டன.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி, உயிருடற்சேதத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுநர்மீது காவல்துறை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறது.