ஊழலை ஒழித்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம்

கர்நாடக சட்டமன்றக் கூட்டுக்கூட்டத்தின் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்

ஊழலை ஒழித்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம்

2 mins read
0523ed78-f1a9-4c8a-8014-4499b6184da1
கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட். - படம்: ஊடகம்

சித்தராமையாவின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநிலத்தில், முதன்முறையாக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. சட்டமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார்.

அவரது உரையில், அரசியல் சாசனத்தின்படி ஆட்சிசெய்து, அனைத்துத் தரப்பு மக்களும் வளர்ச்சி பெறவும், அமைதியை நிலைநாட்டவும் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த அரசு அமைதியான, அன்பு மிகு சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

தற்போது கர்நாடகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தச் சிக்கலில் இருந்து மாநிலத்தை மீட்பதே அரசின் தலையாயக் கடமை. வலுவான பொருளாதாரம், பொதுநலன் ஆகிய இரண்டையும் உறுதிசெய்து நல்லாட்சி வழங்குவோம்.

நாங்கள் ஐந்து உத்தரவாதத் திட்டங்களை அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளோம். அந்த திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளை நாங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்.

மக்களின் பசிபோக்கும் திட்டம், வேலை தேடும் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, வீடுகளுக்கு 200 யூனிட் அளவு இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவி நிதி உள்ளிட்ட பல நலத் திட்டங்கள் குறித்து தன் உரையில் பேசினார்.

முக்கியமாக மக்களின் ஆதரவுடன் ஊழலை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சியிலும் வளங்களிலும் அனைத்துத் தரப்பினரும் பயனடைவதை உறுதி செய்ய வழி காணப்படும். ஆகமொத்தத்தில், சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம்.

“ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் தரிசு நிலங்கள் அதிகமாக உள்ளன. அந்த நிலப் பகுதிகளுக்கான நீர்ப்பாசனத் திட்டங்கள் அமல்படுத்தப்படும். அத்துடன் வேளாண்மை மேம்பாட்டிலும் அரசு கவனம் செலுத்தும்,” என்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தன் உரையில் தெரிவித்தார்.