நாகை: நாகப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்தியா, இலங்கை இடையேயான பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா, படகுச் சேவைக்காக இந்தியா தேர்ந்தெடுத்த துறைமுகத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்றார்.
“இந்தியத் தரப்பில் புதிதாக நாகப்பட்டினம் துறைமுகத்தை தேர்வு செய்துள்ளனர். அங்கு வசதிகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளளது. இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதன் காரணமாக படகுப் போக்குவரத்தை தொடங்குவதில் தாமதம் நிலவுகிறது,” என்றார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.
இந்தியா, இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை இரு நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
புதுவை மாநிலத்தில் உள்ள காரைக்காலில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு கடந்த ஏப்ரல் மாதமே படகுப் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது.